வங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்

வங்கி ஊழியர் கொலை ; பழிக்கு பழியாக பயங்கரம்

திருச்சி அருகே, பழிக்கு பழியாக, தனியார் வங்கி ஊழியர் கொலை செய்யப்பட்டார்.

திருச்சி, மண்ணச்சநல்லுார் அருகே, பாளையநல்லுாரைச் சேர்ந்தவர் கோவேந்திரன், 40. இவர், ஓராண்டுக்கு முன், பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ரயில்வே போலீஸ்காரர் ரெங்கராஜ், 58, என்பவரை, இடத்தகராறில் கொலை செய்தார்.இந்த வழக்கில், கோவேந்திரன் கைதாகி, சிறையில் உள்ளார். இந்நிலையில், கோவேந்திரன் குடும்பத்தினர், தங்களது வீட்டை, பாளையநல்லுாரில் இருந்து பாச்சூருக்கு மாற்றினர். இதற்காக, போலீசார் பாதுகாப்புடன் நேற்று, வீட்டில் இருந்து பொருட்களை எடுத்துச் சென்றனர்.
பொருட்களை வேனில் ஏற்றி அனுப்பிய கோவேந்திரன் தம்பி புகழேந்தி, 36, பல்சர் பைக்கில், நண்பர் சதீஷ் என்பவருடன், பாச்சூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, காரில் வந்த ஐந்து பேர் கும்பல், அவர்களை வழிமறித்து, புகழேந்தியை வெட்டி கொலை செய்து, தப்பிச் சென்றது.கடந்த ஆண்டு ரெங்கராஜ் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்கு பழியாக, அதே நாளில், புகேழந்தி கொலை செய்யப்பட்டார் என்பது, போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிந்தது. கொலை செய்யப்பட்ட புகழேந்தி, திருச்சி தில்லைநகர் தனியார் வங்கியில், ஊழியராக பணியாற்றி வந்தார்.கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.