திமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு!?

திமுகவில் களையெடுப்பு; இளைஞர்களுக்கே இனி வாய்ப்பு!?

‘சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வில், 45 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே, போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். மூத்த நிர்வாகிகளில் சிலரை தவிர, மற்றவர்களை ஓரங்கட்ட வேண்டும்’ என, அந்தக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த ஆண்டு, மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும், தி.மு.க.,வின் வெற்றி வாய்ப்பு குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி, பிரசாந்த் கிஷோர் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு தொகுதிக்கும் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணியும் அவரிடமே, கட்சி தலைமையால் தரப்பட்டுள்ளது. இதனால், அவரது குழுவினர், ஒவ்வொரு தொகுதிக்கும், ஐந்து பேர் பட்டியலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தி.மு.க., சார்பில், 200 தொகுதிகளில் போட்டியிடவும், மீதமுள்ள, 34 தொகுதிகளை, கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கவும், மேலிடம் தரப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் ஒதுக்கீடு எண்ணிக்கையில் அதிருப்தி ஏற்பட்டால், காங்கிரஸ் வெளியேறினாலும், தி.மு.க.,வுக்கு பாதிப்பில்லை என, லோக்சபா தேர்தல் புள்ளிவிபரங்களுடன், பிரசாந்த் கிஷோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியை பிடிக்க, தி.மு.க., வகுத்துள்ள வியூகத்தில், குறைந்தபட்சம், 45 வயதுக்கு உட்பட்ட வேட்பாளர்களைத்தான் களத்தில் நிறுத்த வேண்டும் என்றும், கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே, அவரது பட்டியல் தயாராகி வருவதாகவும் தெரிகிறது. கட்சியின் மூத்த முன்னோடிகளில், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் சிலருக்கு மட்டுமே, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும்.

‘கருணாநிதியின் விசுவாசிகளாக கருதப்படுகிற மூத்த நிர்வாகிகளுக்கு, போட்டியிட வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றும், அவர்களுக்கு கட்சியில் ஏதாவது பதவி தந்து, ஓரங்கட்டி விட வேண்டும்’ என்றும், பிரசாந்த் தரப்பில் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: ஜாதி, பண பலம், தொகுதி மக்கள் மற்றும் தொண்டர்களிடம் செல்வாக்கு பெற்றவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே, மூத்த நிர்வாகிகள் சிலர், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெறுவர். தேர்தல் செலவுக்கு, கட்சி தரும் பணத்தை நம்பி இருப்பவர்கள், தொண்டர்கள், ஜாதி பலம் இல்லாதவர்கள், எவ்வளவு சீனியராக இருந்தாலும், இந்த முறை, அவர்களுக்கு, ‘சீட்’ தரப்பட மாட்டாது. இளைஞர்களுக்கும், குறிப்பாக, புதுமுகங்களுக்குமே அதிக வாய்ப்பு தர, பிரசாந்த் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

அறிவாலய தகவல்

இது குறித்து, அறிவாலய வட்டாரங்கள் கூறியதாவது: தேர்தல் வெற்றி வியூகம் வகுப்பது மட்டுமே, பிரசாந்த் குழுவினரின் பணியாக இருக்கும் என, தி.மு.க., மாவட்ட செயலர்கள் கருதினர். ஆனால், தற்போது வேட்பாளர் தேர்விலும், அக்குழுவினர் தலையிட்டுள்ளதால், மாவட்ட செயலர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். வழக்கமாக, மாவட்ட செயலர்களிடம் பெறப்படும் பட்டியலில் இருந்து தான், வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். காலங்காலமாக உள்ள நடைமுறையை மாற்ற, பிரசாந்த் திட்டமிடுவதால், மாவட்ட செயலர்களும், முன்னாள் அமைச்சர்களும் குமுறுகின்றனர்.
இதுபோன்ற கட்சி உள்விவகாரங்களில், அவர் தேவையில்லாமல் தலையிடுவதை, கட்சி தலைமையும் கண்டுகொள்வதில்லை. இதுபற்றி, மாவட்ட செயலர்கள் தரப்பில், பல முறை புகார் கூறப்பட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் மன உளைச்சலில் உள்ளனர்.அ.தி.மு.க.,விலும், இதேபோல் தேர்தல் வியூகம் வகுக்க, அரசியல் நிபுணர் சுனில் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், தேர்தல் வெற்றி வாய்ப்புகளை மட்டுமே ஆராய்ந்து, அதற்கு அரசும், கட்சியும் செய்ய வேண்டியவை பற்றி, முதல்வருக்கு அறிக்கை அளிப்பதோடு சரி; வேறு எந்த உள்விவகாரங்களிலும், அவர் தலையிடுவதில்லை.

அதேபோல, பிரசாந்த் கிஷோரும் தன் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கு, தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், தி.மு.க.,வில் மிகப்பெரிய குழப்பம் வெடிக்கும். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.