சாயல்குடி பகுதியில் கொரோனா தடுப்பில் அலட்சியம்: மக்கள் அச்சம்!

சாயல்குடி பகுதியில் கொரோனா தடுப்பில் அலட்சியம்: மக்கள் அச்சம்!

ராமநாதபுரம், 11.07.20:
சாயல்குடி பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால் அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பாதுகாப்பான மாவட்டமாக இருந்த ராமநாதபுரத்தில், இப்போது நாள்தோறும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை விறுவிறுவென அதிகரித்து, 1691ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 32. இருந்தபோதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளிலும், பொது சுகாதார நடவடிக்கைகளிலும் தொய்வு ஏற்பட்டு அச்சத்தை மக்களிடம் அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்நிலையில் கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் கொரோனா தொற்று நிலவரம் கவலை அளிப்பதாக உள்ளது.
கடந்த 4 நாட்களில் இந்த 2 தாலுகாக்களில் தலா 2 ஆண்கள் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். மேலும் கடலாடி தாலுகாவில் மர்மக் காய்ச்சலால் ஒரே நாளில் 2 பேர் இறந்து விட்டனர். இன்னும் சிலர் காய்ச்சல், சளி தொல்லைக்கு ஆளாகி, தனியார் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

கடலாடி தாலுகாவில் மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் கொண்ட முக்கிய நகரமான சாயல்குடி நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. இங்கு கிருமி நாசினி தெளிப்பு மற்றும் பொது சுகாதாரப் பணிகளில் தொடர்ந்து அலட்சியம் காட்டப்படுகிறது. தேவையின்றி ஊர் சுற்றுவோரையும், பைக்கில் மூன்று பேர், நான்கு பேர் என்று சவாரி செய்பவர்களையும், முகக்கவசம் அணியாமல் இருமல், தும்மலுடன் நடமாடுவோரையும் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.

இதுதவிர, சாயல்குடிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. சமூக இடைவெளி, முகக்கவசம் பற்றியெல்லாம் இவர்கள் கவலைப்படுவதில்லை.

காய்கறிகள், மளிகை, இறைச்சிக்கடை, மருந்துக்கடைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில் கும்பல் கும்பலாக மக்கள் திரண்டு முண்டியடித்து பீதி கிளப்புகின்றனர்.

சாயல்குடியில் கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோயாளிகள் கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படவில்லை. கொரோனாவுக்கு பலியானோர் வசித்த பகுதிகளிலும் போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை. இதனால் நோய்த்தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி, மருத்துவம், காவல் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களை முடுக்கி விட்டு, தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இல்லையெனில், சாயல்குடி பகுதியில் நோய்த்தொற்று மற்றும் உயிர்ப்பலி அதிகரிப்பதை தவிர்க்க முடியாது என்று பொதுமக்கள் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.