பவானியில் விபரீத குஷி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 பேர்

பவானியில் விபரீத குஷி: திடீர் வெள்ளத்தில் சிக்கிய 23 பேர்

கோவை, 17.05.20:
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 23 பேரை தீயணைப்புத்துறையினர் இரண்டு மணி நேரம் போராடி மீட்டனர்.

கோவை மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையில் பவானி ஆறு ஓடுகிறது. ஆற்றில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும்போது நடுப்பகுதியில் கற்குவியல் திரண்டு, 2 கிளைகளாக பாய்ந்து ஓடுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக நெல்லித்துறை படித்துறை அருகே பவானி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆற்றில் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது.
ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தவர்கள் ஆற்றைக் கடந்து நடுப்பகுதிக்கு நீந்திச் சென்றனர். அப்போது திடீரென ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

உடனே, ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, அவசரமாக கரைக்கு திரும்ப முயன்றனர். வெள்ளத்தின் வேகம் அதிகரித்ததால், எவ்வளவு போராடியும் அவர்களால் கரை சேர முடியவில்லை. இதனால், ஆற்றின் நடுவே மேட்டுப் பகுதியில் காய்ந்த மரக்கிளைகளில் தொங்கிக்கொண்டு தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தரப்பட்டது. உடனே, மேட்டுப்பாளையம் தாசில்தார் சாந்தாமணி மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். ஆற்றின் மையப்பகுதியில் பல்வேறு இடங்களில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தவர்களை நெல்லித்துறை பொதுமக்கள் மற்றும் அங்குள்ள பரிசல் ஓட்டுபவர்கள் உதவியுடன் பைபர் பரிசல் மூலம் பத்திரமாக மீட்டு கரை சேர்த்தனர்.

தீயணைப்புத்துறையினர் 2 மணி நேரம் தொடர்ந்து போராடி ஆற்றின் நடுப்பகுதியில் சிக்கித் தவித்தவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர், மீட்கப்பட்ட 23 பேரையும் தாசில்தார் சாந்தாமணி மற்றும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

‘கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவம், வருவாய், காவல், தீயணைப்பு, துப்புரவு உட்பட்ட துறைகளிம் களப்பணியாளர்கள் தீவிரமான மேற்கொண்டு வரும் இந்த நேரத்தில் பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து உறுதுணையாக செயல்பட வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடு காக்க வேண்டும். அதை விடுத்து, களப்பணியாளர்களின் சக்திகளை வீணடிக்கச் செய்யும் வகையில் இதுபோன்ற அவசியமற்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்’ என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.