சாயல்குடி நகரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி!

சாயல்குடி நகரில் ஊரடங்கு கேள்விக்குறி: மக்கள் பீதி!

ராமநாதபுரம், 24.04.20:
சாயல்குடியில் ஊரடங்கு உத்தரவு மீறப்படுவது சகஜமாகி விட்டதால், கொரோனா பீதியில் மக்கள் பரிதவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன.
கொரோனா தொற்றுக்கு ஆளானோர் வசித்த பகுதிகள் முடக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியே சுற்றுவதை கட்டுப்படுத்த காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் உள்ளனர். அவசியத் தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் எல்லாரும் கட்டாயமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர். இதனால், சில பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரமாக உள்ள சாயல்குடியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நகர தெருக்களில் மக்கள் சர்வ சாதாரணமாக நடமாடுகின்றனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகாதவாறு மக்களை காக்கவும், கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்கவும் மருத்துவம், வருவாய் மற்றும் காவல்துறையினர் இரவு பகல் பாராது தீவிரமாக உழைத்து வரும்போதும், மக்களிடம் அலட்சியப் போக்கே நிலவுகிறது. சாயல்குடி நகர தெருக்களில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

அரிசி, மளிகை, ஷாப்பிங், காய்கறி, பழம், இறைச்சி, மீன், மருந்துக்கடைகள், டீக்கடை மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளியை மக்கள் சிறிதும் கடைப்பிடிக்காமல் முண்டியடிக்கின்றனர். தனியார் மருத்துவமனைகளிலும் இதே சிரமம் நிலவுகிறது.

வியாபாரிகளும், காவல்துறையினரும் எத்தனை முறை அறிவுரை சொன்னாலும் பெரும்பாலானோர் கேட்பதில்லை. கொரோனா அச்சம் குறித்த கவலை சிறிதுமின்றி, முகக்கவசம் கூட அணியாமல் கூட்டம் கூட்டமாக வந்து அதிர வைக்கின்றனர். மதியத்துக்குப் பிறகு இளைஞர்கள் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக நகர தெருக்களில் முகாமிடுகின்றனர். இது, இரவு 9 மணி வரை நீடிக்கிறது.

சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள 50க்கும் அதிகமான கிராம மக்களுக்கு நுகர்வுப்பொருள் விற்பனை நகரமாக சாயல்குடி இருப்பதால் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதுதவிர, கடலாடி, பெருநாழி, கோவிலாங்குளம், வேம்பார், கன்னிராஜபுரம், நரிப்பையூர், மாரியூர், கீழச்செல்வனூர் பகுதி சில்லறை வியாபாரிகளும் மொத்த கொள்முதலுக்காக சாயல்குடி வருவதால் கூட்ட நெரிசலும், மக்கள் நடமாட்டமும் அதிகரிக்கிறது. இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகன போக்குவரத்தும் கட்டுக்கடங்காமல் உள்ளது.  இது சாயல்குடி நகர மற்றும் சுற்று வட்டார மக்களிடம் கொரோனா பீதியை அதிகரித்துள்ளது.

எனவே, அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து, ஊரடங்கு உத்தரவை முழுமையாக அமல்படுத்தும்படியும், அவசிய காரணங்களுக்காக வெளியே வரும் மக்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத மற்றும் முகக்கவசம் அணியாதவர்கள் மீதும், வியாபார நோக்கத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.