சிகரெட் ‘விளையாட்டு’ சீரியஸ்: தடை போடுமா அரசு?

சிகரெட் ‘விளையாட்டு’ சீரியஸ்: தடை போடுமா அரசு?

ராமநாதபுரம், 15.04.20:
ராமநாதபுரம் மாவட்டத்தில் சிகரெட், பீடி உட்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, உபயோகிப்பாளர்களை அதிர வைத்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால் மளிகை, அரிசி, காய்கறி, மீன், இறைச்சி, மருந்துக்கடைகள் மற்றும் உணவு விற்பனை மையங்கள் மட்டுமே மதியம் ஒரு மணி வரை திறக்கப்படுகின்றன. வெற்றிலை, பாக்கு மற்றும் பீடி, சிகரெட் உட்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் பெட்டிக்கடைகள் திறக்கப்படவில்லை. ஆனாலும், மேற்கண்ட பொருட்களை உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

இதை பயன்படுத்திய மொத்த வியாபாரிகள் சிலர், புகையிலைப் பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாடு ஏற்படுத்தி, அதிக விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் லாபம் பார்க்கும் நோக்கத்தில் சப்ளையை திட்டமிட்டு குறைத்து வருகின்றனர். காரணம் கேட்டால், சப்ளை இல்லை என்கின்றனர்.

சிகரெட் உற்பத்தி குறித்து ஐடிசி நிறுவனங்களில் விசாரித்தபோது, தட்டுப்பாடு என்ற பேச்சுக்கு இடமே இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. பிறகு எப்படி தட்டுப்பாடு என்ற கேள்விக்கு, ஐடிசி டீலர்களை சுட்டிக்காட்டுகின்றனர் மொத்த வியாபாரிகள்.

அதிகபட்ச சில்லறை விலையை விட (Maximum Retail Price) கூடுதல் தொகை தந்தால் மட்டுமே சிகரெட் சப்ளை செய்யப்படும் என்று டீலர்கள் தரப்பில் கூறப்படுவதாகவும், அப்படி கூடுதல் விலைக்கு வாங்கி சில்லறை வியாபாரிகளுக்கு சப்ளை செய்தால் லாபம் கிடைக்காது என்பதால், கொள்முதல் செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
மதுரை டீலரிடம் இருந்து போதுமான சப்ளை வராததால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த செயற்கை தட்டுப்பாடு காரணமாக, உபயோகிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக, எந்த ஒரு பொருளையும் ஐந்து பைசா உயர்த்தி விற்றால் கூட கொடி பிடிக்கும் அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புக்களும், சிகரெட் விலையை அரசு எவ்வளவு உயர்த்தினாலும் கண்டுகொள்வதில்லை. அதை வியாபாரிகள் பதுக்கினாலும், விலையை எவ்வளவு உயர்த்தினாலும் கவலைப்படுவதில்லை. சிகரெட் பிரச்னைக்கு குரல் கொடுப்பதை ஒரு தேசிய குற்றம் போல கருதி கடந்து சென்று விடுகின்றனர்.

சிகரெட் விற்பனையை அரசே அனுமதிக்கிறது. ஆனால், அதை உபயோகிப்பவர்களுக்கு விலையேற்றம், பதுக்களால் ஏற்படும் பதிப்புகள் பற்றி அரசோ, அதிகாரிகளோ கவலைப்படுவதில்லை. பெயரளவு ஆய்வு கூட இல்லை. இது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

எனவே, அரசு உடனடியாக தலையிட்டு, சிகரெட் பதுக்கல் மற்றும் செயற்கை விலையேற்றத்தை தடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சிகரெட் விற்பனைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். இதுவே, புகையிலைப்பொருள் உபயோகிப்பவர்களை காக்கும் ஒரே வழியாகும்.