உலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்!

உலகையே உலுக்குது கொரோனா: சாயல்குடியில் சகஜ நிலை விபரீதம்!

ராமநாதபுரம், 06.04.20:
உலகையே உலுக்கும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையிலும் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியில் சிறிதும் கவலையின்றி மக்கள் நடமாடி வருவது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சீனாவில் இருந்து கிளம்பிய கொடிய கொரோனா வைரஸ், இன்று உலகையே உலுக்கி வருகிறது. கொரோனா தாக்குதலில் உலகில் இதுவரை 70 ஆயிரம் பேர் பலியாகி விட்டனர். 12 லட்சத்து 83 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்பில் இருந்த லட்சக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

சாயல்குடி பஜார் -தூத்துக்குடி விலக்கு ரோடு

கொரோனா வைரசை கட்டுப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் நாளை என்ன நடக்குமோ என்ற பீதியில், உலகின் வல்லரசாக அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் கலக்கத்தில் தவிக்கின்றன. கொரோனா வைரஸ் தாக்குதல், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனையும் விடவில்லை. கொரோனா தொற்றுக்கு ஆளான போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் இருக்கிறார். இது கொரோனா பீதியை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 111 பேர் கொரோனாவுக்கு பலியாகி விட்டனர். இதுவரை 4 ஆயிரத்து 288 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு கீழக்கரையைச் சேர்ந்த முதியவர் பலியானார். பரமக்குடியைச் சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர். இவர்களின் தொடர்புடைய நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விலகல் இல்லை

கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க ஒரே வழி சமூக விலகல்தான் என்ற காரணத்தால், ஊரடங்கை மத்திய அரசு கடந்த 25ம் தேதி அமல்படுத்தியது. அதற்கு முன்னதாகவே 144 தடை உத்தரவை தமிழக அரசு கொண்டு வந்தது. ஆனால், மக்கள் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

தூத்துக்குடி சாலை – சாயல்குடி

இந்திலையில், கொரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்த இந்த எண்ணிக்கை ஒரே வாரத்தில் 600ஐ நெருங்கி பீதியை அதிகரித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த வருவாய் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவை தவிர மற்ற எந்த காரணத்துக்காகவும் வீட்டை விட்டு மக்கள் வெளியே வரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்துள்ளனர். இதனால் பல இடங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

ஆனால், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, கடலாடி, மாரியூர், நரிப்பையூர், பெருநாழி பகுதிகளில் மக்கள் இன்னும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்காமல் இஷ்டத்துக்கும் தெருக்களில் கார், பைக், ஆட்டோக்களில் வலம் வருகின்றனர். காவல்துறையினர் எவ்வளவுதான் அறிவுரை வழங்கி, எச்சரிக்கை விடுத்தாலும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை.

சாயல்குடி பஜார்

சாயல்குடி நகரில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நகர தெருக்களில் மக்கள் இஷ்டத்துக்கும் நடமாடுகின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக திறக்கப்பட்டிருக்கும் காய்கறி, பழம், மளிகை, கோழி, மீன் கடைகளிலும், மருந்துக்கடைகளிலும் சமூக இடைவெளியை நினைத்துக்கூட பார்க்காமல் ஒருவரை ஒருவர் முண்டியடிக்கின்றனர். வியாபாரிகள் என்னதான் எச்சரிக்கை விடுத்தாலும் கேட்பதே இல்லை. கொரோனா தொற்றின் விபரீதம் குறித்தோ, கொரோனா தடுப்புக்கு சமூக விலகல் அவசியம் என்பது குறித்தோ சிறிதும் கவலையின்றி மிகவும் அலட்சியமாகச் செயல்படுகின்றனர். பல கிராமங்களிலும் இதே நிலைதான். இது மக்களிடம் கொரோனா பீதியை மேலும் அதிகரித்துள்ளது.

காவல்துறையினர் என்னதான் முயன்றாலும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மக்கள் நடமாட்டம் பரவலாக காணப்படுகிறது. எனவே, சமூக அக்கறையுள்ள உள்ளுர் இளைஞர்களை தேர்வு செய்து, அவர்கள் உதவியுடன் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளலாம். இதற்கு மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து, கொரோனா தொற்றில் இருந்து இந்தப் பகுதியை காக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேரூராட்சி அலட்சியம்

சாயல்குடியில் கொரோனா தொற்று தடுப்புப்பணிகளில் பெரிதும் மந்த நிலை நிலவுகிறது. சாயல்குடி நகரில் சில இடங்களில் மட்டும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தெருக்களில் பிரதான சாலைகளில் மட்டும் பெயரளவுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தெருக்களின் உள்பகுதிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இதனால், சுகாதாரமும், கிருமி தடுப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சாயல்குடியில் கன மழை, இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்தது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியதால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் கிருமி நாசினி தெளிப்புப் பணியில் சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவது மக்களை கோபப்பட வைத்துள்ளது.