முதலில் புரட்சி, அப்புறமே கட்சி: அதிர வைத்த ரஜினி வாய்ஸ்!

முதலில் புரட்சி, அப்புறமே கட்சி: அதிர வைத்த ரஜினி வாய்ஸ்!

சென்னை, 12.03.20:
மக்களிடம் எழுச்சி இயக்க புரட்சி வந்த பிறகு மட்டுமே அரசியலுக்கு வருவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் அதிரடியாக அறிவித்து, தமிழக அரசியல் அரங்கை மட்டுமின்றி, ஒட்டுமொத்த ரசிகர் கூட்டத்தையும் குழப்பத்தில் ஆழ்த்தி, தெளிவான முடிவை அறிவித்துள்ளார்.

தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும் அந்த வெற்றிடத்தை நிரப்பவும், கெட்டுப்போய் இருக்கும் ஆட்சி சிஸ்டத்தை சரி செய்யவும் அரசியலுக்கு தான் வரப்போவதாக ரஜினி, 2017ல் அறிவித்தார். அந்த நாள் முதல், தமிழகத்தில் அரசியல் புகை சூழ்ந்தது. வருவார், வர மாட்டார் என்ற கணிப்புகளும் கலக்கின.

இந்தச் சூழலில், சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த ரஜினி, தனக்கு பெரிய ஏமாற்றம் என்று பீடிகை போட்டு விமர்சன ஹீரோ ஆனார்.

இந்நிலையில், மன்ற நிர்வாகிகளை அவசரமாக இன்று சந்தித்த ரஜினி, ஒரு அதிரடி முடிவை எடுத்து, அதை பத்திரிகையாளர் முன்னிலையில் இன்று பகிர்ந்து கொண்டார். அப்போது அவருடைய பேச்சின் சாராம்சம் இதோ:

கடந்த வாரம் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஒரு விஷயத்தில் திருப்தியில்லை, தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றமே என்று பேசியது ஊடகத்தில் பலவிதமாக வெளிவந்தது. நான் பேசியது மாவட்ட செயலாளர்கள் மூலம் வெளிவரவில்லை. அதற்காக அவர்களுக்கு என் நன்றி.

கடந்த 25 ஆண்டுகளாக நான் அரசியலுக்கு வருவதாக சொல்கின்றனர். ஆனால், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னது 2017 டிசம்பரில் மட்டுமே.

முதல்வர் பதவியில் எனக்கு விருப்பம் இல்லை. சட்டசபைக்கு போய் பேச விரும்பவில்லை, கட்சிக்கு தலைவனாக மட்டுமே இருக்க நினைக்கிறேன்.

ஆட்சிக்கு வேறொருவர் தலைமை வகிக்க வேண்டும். கட்சித் தலைவராக நான் இருந்து, எதிர்க்கட்சி வேலையை செய்ய வேண்டும். தேர்தல் முடிந்ததும், குறிப்பிட்ட பதவிகள் தவிர மற்ற கட்சிப் பதவிகள் அனைத்தும் கலைக்கப்படும்.

மாற்றுக்கட்சிகளில் இருந்து வந்தவர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும். என் மன்றத்தினரில் 50 வயதுக்கும் குறைவான, படித்த, ஒழுக்கமுள்ள, மக்கள் செல்வாக்குள்ளவர்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படும்.

சிஸ்டம் சரி செய்யாமல் ஆட்சி நடந்தால் நன்றாக இருக்காது. புதியவர்கள், இளைஞர்கள் கட்சிப் பதவிக்கு வருவதில்லை. அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான் வருகிறார்கள். அந்த நிலையை மாற்ற வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக, வரும் தேர்தலில் வாழ்வா, சாவா என்ற நிலையில் செயல்படுகிறது. அந்தக் கட்சிக்கு அடிப்படை கட்டமைப்பு, பணம் உள்ளது. அடுத்து, இப்போது ஆளும் அதிமுக, கஜானாவையே தன் கையில் வைத்துள்ளது. அதிகார பலம், அடிப்படை கட்டமைப்பு பலமாக உள்ளது. இவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றால் ஒரு புரட்சி இயக்கம் தேவை. அது இல்லாமல் தேர்தலை சந்தித்தால், என்னை நம்பியவர்களை பலிகடா ஆக்கியதாக ஆகும். அதை நான் செய்ய மாட்டேன்.

நமக்கு பதவி முக்கியமல்ல. இந்த சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும், வரும் தலைமுறை நன்றாக வாழ வேண்டும் என்பதே என் அக்கறை. அதற்கு ஒரு சமூகப் புரட்சி தேவை. நம் கொள்கைகளை தெருவெங்கும் எடுத்துச் சொல்லுங்கள். நம் கொள்கைகளை சொல்லும் ஒரு இயக்கத்தையே நடத்துங்கள். வரட்டும், மக்கள் வரட்டும். அதில் ஒரு அலை வரட்டும். புரட்சி வரட்டும். அதை பார்த்த பின்பு அரசியலுக்கு நான் வருகிறேன். இது உறுதி!
இவ்வாறு ரஜினி பேசினார்.

ஆக, மாற்று அரசியலுக்கான பெரிய புரட்சி வந்தால் ரஜினி கட்சி வரும். இல்லையேல், புரட்சி கருத்தாழம் மிக்க ரஜினி படம் இன்னொன்று வரும் என்பதே அவர் வாய்ஸ் சொல்லும் மெசேஜ்.

இந்த மெசேஜ், ரஜினி ஒரு தடவை சொன்ன இந்த மெசேஜ், ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் தலைகளையும் நூறுக்கும் அதிகமான தடவை யோசிக்கவும், பரிகசிக்கவும் வைத்திருக்கிறது, வழக்கம் போல!