புது மாப்பிள்ளைக்கு கழுதை மரியாதை: இது மராட்டிய வினோதம்!

புது மாப்பிள்ளைக்கு கழுதை மரியாதை: இது மராட்டிய வினோதம்!

மும்பை, 11.03.20:
தங்கள் வீட்டு பெண்ணை மணந்த மருமகனுக்கு, ஹோலி பண்டிகை நாளில் கழுதை மரியாதை வழங்கப்படும் வினோதம், மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடந்து வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் உள்ள விதா கிராமத்தில், ஆண்டுதோறும் ஹோலி பண்டிகை நாளில் புது மாப்பிள்ளையை கழுதை மீது ஏற்றி, ஊர்வலமாக அழைத்துச் சென்று, அவருக்கு பரிசு வழங்குவது நடைமுறையில் உள்ளது.

அந்த வழக்கம் அடிப்படையில், இந்த ஆண்டின் ஹோலி பண்டிகை நாளான 10ம் தேதி, புது மாப்பிள்ளை தத்தாத்ரே கெய்க்வாட் என்பவரை கழுதை மீது ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் ஊர் மக்கள்.

அந்தக் கிராமத்தில் அனைத்து தெருக்களிலும் வலம் வந்த ஊர்வலம், ஊர் எல்லையில் உள்ள அனுமார் கோவிலில் நிறைவடைந்தது. இதையடுத்து, அங்கு வைக்கப்பட்டிருந்த பரிசுப் பொருட்களில் தனக்கு பிடித்த புத்தாடைகளை தத்தாத்ரே கெய்க்வாட் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டார். அங்கும் இங்கும் தெடித்தேடி, தனக்குரியதை தேர்வு செய்து, விலை உயர்ந்த அந்த ஆடைகளை எடுத்துக் கொண்டார். பின்னர், மனைவியைத் தேடி, இனிக்கும் கனவுகள் சுமந்து உற்சாகத் துள்ளலுடன் அங்கிருந்து விரைந்தார். இதையடுத்து, அந்த சம்பிரதாய சடங்கு நிறைவு பெற்றது.

இது குறித்து விதா கிராமத்தைச் சேர்ந்த தத்தா தேஷ்முக் கூறியதாவது:
இந்தக் கிராமத்தில் 90 ஆண்டுகளுக்கு முன்னர் வசித்த ஊர் பெரியவர் ஆனந்த் ராவ் தேஷ்முக், புதிதாக தன் குடும்பத்தில் இணைந்த மாப்பிள்ளையை வரவேற்கும் விதமாக, அவரை கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்றார்.

இறுதியில், ஊர் எல்லையில் உள்ள அனுமார் கோவிலில் வைத்து அவர் விரும்பிய புத்தாடைகளை பரிசாக அளித்தார். அந்த நாள் முதல் இது ஒரு சமூக சம்பிரதாயமாகவே இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டு ஹோலி பண்டிகை நாளின் போதும் புது மாப்பிள்ளையின் கழுதை ஊர்வலம் நடந்து வருகிறது. இப்போது இது எங்கள் மரபாகவே மாறி விட்டது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.