தமிழகத்தில் விஷ மீன்கள் விற்பனை: அரசு அதிர்ச்சி… அதிகாரிகள் உஷார்

தமிழகத்தில் விஷ மீன்கள் விற்பனை: அரசு அதிர்ச்சி… அதிகாரிகள் உஷார்

மதுரை, 04.03.20:
இறந்தவர்களின் உடலை பதப்படும் பார்மலின் கலந்த 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது அதிகாரிகளை அதிர வைத்துள்ளது. இதைத்தொடர்ந்து, பார்மலின் கலந்த மீன்களை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்து உணவுப் பாதுகாப்புத்துறை விளக்கம் அளித்துள்ளது.

மதுரை கரிமேடு மீன் மார்க்கெட்டில் உள்ள மீன் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, இறந்தவர்களின் உடலை பதப்படுத்த பயன்படும் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த 2 டன் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இது, அரசு, அதிகாரிகள், மக்கள் மட்டுமின்றி, மீனவர்கள், மீன் வியாபாரிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு நடத்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், ‘பார்மலின் கலந்த மீன்களை கண்டுபிடிப்பது எப்படி?’ என்பது குறித்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் அளித்துள்ள விளக்கம் இதோ:
பார்மலின் என்பது, இறந்தவர்கள் உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் வகையில் பதப்படுத்தி வைக்க பயன்படுத்தப்படும் ஒரு (கெமிக்கல்) ரசாயனம்.
இதை மீன்கள் மீது தூவுவதால், அவை 15 நாட்கள் வரை கெட்டுப்போகாமல் புத்தம் புதியது போல கண்களுக்கு தெரியும்.

இந்த மீன்களை சாப்பிட்டால் வாந்தி, தலைவலி, வயிறு மற்றும் புத்தி மந்த நிலை போன்றவை ஏற்படும். தொடர்ச்சியாக சாப்பிடுவதால் கிட்னி பாதிப்பு, புற்றுநோய் உட்பட அபாயகரமான நோய்கள் ஏற்படும்.

எனவே, மார்க்கெட்டில் மீன்கள் வாங்கும்போது அதன் கண்கள் நன்றாக உள்ளதா, செவுள் சிவப்பாக உள்ளதா, உடல் உறுதித்தன்மையுடன் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். கடையில் பல நாட்கள் வைத்திருந்த மீன் புதிதுபோல் இருந்தாலே பார்மலின் கலந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

பார்மலின் கலந்த மீனை முகர்ந்து பார்த்தால் மூக்கில் எரிச்சல் ஏற்படும். மார்க்கெட்டில் வாங்கி வரும் மீன்களை மூன்று அல்லது நான்கு முறை கழுவ வேண்டும். அப்படி கழுவினாலே பார்மலின் கரைந்து விடும். அத்துடன், மீன் குழம்பை நன்கு கொதிக்க விட வேண்டும்.

ஒரு கொதி நிலை வந்தால் அது 65 டிகிரி; இரண்டு கொதி நிலை வந்தால் அது 75 டிகிரி. எனவே, இரண்டு கொதி நிலை வைக்க வேண்டும். அதாவது, 75 டிகிரியை எட்ட வேண்டும். அப்போது, பார்மலின் ஆவியாகி வெளியேறக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
இதையும் தாண்டி ஏதேனும் வாடை வந்தால், உணவுப் பாதுகாப்புத்துறைக்கு புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு எச்சரிக்கிறார், தன் பணிக்கடமை மட்டுமின்றி சமூக பொறுப்புணர்வும் அதிகமாகக் கொண்ட அந்த அதிகாரி.