கன்னட ஜல்லிக்கட்டில் கலக்கிய கவுடா: 42 பதக்கங்களை அள்ளி சாதனை!

கன்னட ஜல்லிக்கட்டில் கலக்கிய கவுடா: 42 பதக்கங்களை அள்ளி சாதனை!

பெங்களூர், 04.03.20:
‘நாட்டுப்புற விளையாட்டுகளின் உசேன் போல்ட்’ என்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் கவுடா, கம்பளா விளையாட்டின் ஒரே தொடரில் 42 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார்.

தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு விளையாட்டைப்போல், கர்நாடகாவில் கம்பளா எனும் எருது ஓட்டப்பந்தயம் மிகவும் பிரசித்திப் பெற்ற பாரம்பரிய விளையாட்டாக விளங்குகிறது. இதில், சேற்றில் ஓடும் ஒரு ஜோடி எருதுகளின் கயிறுகளை பிடித்தபடி, அந்த விளையாட்டில் பங்குபெறும் வீரரும் ஓடி இலக்கை அடைய வேண்டும்.

இதன்படி, வேனூரில் கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி நடந்த ஓட்டப்பந்தயத்தில், கம்பளா எருது பயிற்சி வீரரான ஸ்ரீநிவாச கவுடா (28) என்பவர் தன்னுடைய எருதுகளுடன் கலந்து கொண்டார். இதில் அவர், மின்னல் வேகத்தில் ஓடி இலக்கை அடைந்து, 4 பதக்கங்களை வென்றார்.

பின்னர், தட்சிண கன்னட மாவட்டம் உப்பினங்கடியில் நடந்த விஜய விக்ரம கம்பளாவில், மேலும் 3 பதக்கங்களை வென்றார். இந்தத் தொடரில் இதுவரை அவர் 42 பதக்கங்களை பெற்றுள்ளார். இதன் மூலம், ஹக்கேரி ஷெட்டி என்பவரின் ‘ஒரே தொடரில் 32 பதக்கங்கள்’ என்ற முந்தைய சாதனையை, ஸ்ரீநிவாஸ் கவுடா முறியடித்துள்ளார்.

அத்துடன், இலக்கை மிக விரைவாக கடந்துள்ள சாதனையால், ‘நாட்டுப்புற விளையாட்டுகளின் உசேன் போல்ட்’ என கர்நாடக மக்களால் அழைக்கப்படுகிறார். இந்த ஆண்டுக்கான இறுதி கம்பளா விளையாட்டு, வரும் 7ம் தேதி பெல்தங்கடியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.