தப்பிய தந்தையை காத்த போலீஸ்: காப்பகத்தில் மீட்ட மகன் நெகிழ்ச்சி!

தப்பிய தந்தையை காத்த போலீஸ்: காப்பகத்தில் மீட்ட மகன் நெகிழ்ச்சி!

கோவை, 28.02.20;
கோவை மாநகராட்சி காப்பகத்தில் 30 நாட்களாக பராமரிக்கப்பட்டு வந்த முதியவர், அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் ஆதரவற்ற நிலையில் முதியவர் ஒருவர் சாலையோரம் கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி படுத்திருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த போலீஸ்காரர் செல்வராஜ் என்பவர் பார்த்து வேதனைப்பட்டார். உடனே, அவரை மீட்டு மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் செல்வராஜ் ஒப்படைத்தார்.

அந்த முதியவர் குறித்து அந்தப்பகுதியில் விசாரணை நடத்தியதில், அவர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவருடைய குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையறிந்ததும், குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு வந்த அவருடைய மகன் காளிமுத்து, தன் தந்தையை காணவில்லை என்று சூலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் எப்ஐஆர் நகலை காட்டினார்.
இதைத்தொடர்ந்து, காப்பகத்தில் இருந்த ராமசாமியை காளிமுத்துவிடம் ஒப்படைத்தனர்.

தன் தந்தையை மீட்டு காப்பகத்தில் சேர்த்த போலீஸ்காரர் செல்வராஜ் மற்றும் காவல்துறையினருக்கும், 30 நாட்களாக அவரை பராமரித்து வந்த காப்பக நிர்வாகத்தினருக்கும் தன்னுடைய நெகிழ்ச்சி நன்றியை காளிமுத்து தெரிவித்து விட்டு, தன் தந்தையை கண்ணீர் மல்க, வாஞ்சையுடன் அழைத்துச் சென்றார்.