சிவன் கோவிலில் தங்கப்புதையல்: திருச்சியில் பரபரப்பு!

சிவன் கோவிலில் தங்கப்புதையல்: திருச்சியில் பரபரப்பு!

திருச்சி, 27.02.20:
திருவானைக்காவல் கோவிலில் நந்தவனம் அமைக்க பள்ளம் தோண்டியபோது, தங்க புதையல் கிடைத்தது.

திருச்சி அருகே திருவானைக்காவலில் பழம் பெருமை வாய்ந்த ஜம்புகேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அங்கு அகிலாண்டேஸ்வரி அம்மன் சன்னதி முன்பு உள்ள வாழைத் தோட்டத்தை நந்தவனமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

கட்டுமானத்துக்காக பள்ளம் தோண்டியபோது, பூமிக்கு கீழே ஒரு அடி ஆழத்தில் பித்தளை கூஜா ஒன்று புதைந்து கிடந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு பணியாளர்கள் தகவல் கொடுத்தனர்.

நிர்வாக அதிகாரிகள் விரைந்து அந்த கூஜாவை திறந்து பார்த்தபோது, அதனுள் நூற்றுக்கணக்கான தங்க நாணயங்கள் இருந்தது தெரிந்தது. இதையறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு சென்று தங்க நாணயங்கள் மதிப்பை கணக்கீடு செய்தனர்.

அதில் 505 நாணயங்கள் இருந்தன. மொத்தம் 1,716 கிராம் எடைகொண்ட இந்த நாணயங்கள், இப்போதைய சந்தை நிலவரப்படி 68 லட்சம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அந்த தங்க நாணயங்கள் மற்றும் கூஜாவை அரசு கருவூலத்தில் கோவில் உதவி ஆணையர் மாரியப்பன், ஸ்ரீரங்கம் தாசில்தார் ஸ்ரீதர் ஆகியோர் ஒப்படைத்தனர்.

இந்த தங்க நாணயங்கள் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவை, இதை எதற்காக கோவிலில் வைத்திருந்தார்கள் என்று தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.