தினமலர் ஆசிரியர் தாயார் காலமானார்: தினக்காவலன் இரங்கல்!

தினமலர் ஆசிரியர் தாயார் காலமானார்: தினக்காவலன் இரங்கல்!

சென்னை, 27.02.20:
‘தினமலர்’ நாளிதழின் பங்குதாரர் ஸ்ரீஆர்.ராகவன் அவர்கள் மனைவியும், ‘தினமலர்’ ஆசிரியர் முனைவர் ஸ்ரீஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் வழக்கறிஞர் ஸ்ரீஆர்ஆர்.கோபால்ஜி தாயாருமான ஸ்ரீமதி ஆர்.சுப்புலட்சுமி (77) அவர்கள், இன்று (27ம் தேதி) மதியம் இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள், திருச்சி ‘தினமலர்’ அலுவலகம் அருகில் உள்ள அவருடைய இல்லத்தில் (எண் 2, பறவைகள் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி) நாளை (28ம் தேதி) நடைபெற உள்ளது.

ஸ்ரீமதி ஆர்.சுப்புலட்சுமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, மூத்த பத்திரிகையாளரும், தினக்காவலன் ஆசிரியருமான கவிஞர் எஸ்.முருகநாதன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பு:

ஐ மிஸ் யூ அம்மா!

‘தினமலர்’ நாளிதழின் பங்குதாரர் ஸ்ரீஆர்.ராகவன் அவர்கள் மனைவியும், ‘தினமலர்’ ஆசிரியர் முனைவர் ஸ்ரீஆர்.ராமசுப்பு, வெளியீட்டாளர் ஸ்ரீஆர்ஆர்.கோபால்ஜி அவர்களின் தாயாரும், என் மீது அளப்பரிய நேசம் கொண்டிருந்தவருமான அன்புக்குரிய அம்மா ஸ்ரீமதி ஆர்.சுப்புலட்சுமி (77) அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற தகவல் என்னை உலுக்கி விட்டது.

என்னை வணங்க வைத்த தம்பதிகளில் முக்கியத்துவம் பெற்றவர்கள் ஸ்ரீஆர்.ராகவன்-ஸ்ரீமதி சுப்புலட்சுமி தம்பதியர்.
ஸ்ரீஆர்.ராகவன் சார் அவர்களை தினமலர் ஊழியராக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்கு அதிகம். என்னை ஒரு ஊழியராக நடத்தாமல், உற்ற நண்பர் போல பாவித்தார். சமூக அக்கறை, கண்டிப்பு, கட்டுப்பாடு, தொழில் அர்ப்பணிப்பு மட்டுமின்றி, நகைச்சுவை சிந்தனையும் அவரிடம் அதிகம். அவர் கண்டிப்பில் கூட கண்ணியம், அன்பு, அக்கறை நிறைந்திருக்கும். அவரால் ஆசீர்வதிக்கப்பட்டதே என் பெரும் பாக்கியம்.

அதேபோல, அம்மா ஸ்ரீமதி ஆர்.சுப்புலட்சுமி ஒரு கருணைக்கடல். புல் பூண்டுகளைக்கூட நேசிக்கும் வள்ளலார் வழி கொண்டவர். என் நேசத்துக்குரிய அம்மா. எத்தனையோ சந்தர்ப்பங்களில் என்னை ஆசீர்வதித்தவர். என் பிறந்த நாள், மண நாளில் அவர்களிடம் ஆசி பெறுவதே எனக்கு பேறாக இருந்தது. என் இதயத்தில் குடிகொண்ட சில அம்மாக்களில் அவரும் ஒருவர். அவர் மறைவுச் செய்தி என்னை உலுக்கி விட்டது. கையறுநிலையில் நான்; என் செய்வேன், கண்ணீர் காணிக்கையன்றி?

அன்னாரின் ஆன்மா, நமசிவாயம் திருவடி நீழலில் இளைப்பாற, தகப்பன் சுவாமியான என் அப்பன் திருச்செந்தூர் முருகப்பெருமானை உளமுருகி வேண்டுகிறேன்.

அம்மா மீண்டும் மீண்டு வருவார், தினமலர் ஊழியர்கள் குடும்பங்களில் வாழ, அவர்களை வாழ வைக்க என்று நம்புகிறேன்.

இவ்வாறு இரங்கல் செய்தியில் முருகநாதன் குறிப்பிட்டுள்ளார்.