சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் திறப்பு: அதிமுக அரசுக்கு தினக்காவலன் பாராட்டு!

சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபம் திறப்பு: அதிமுக அரசுக்கு தினக்காவலன் பாராட்டு!

சென்னை, 22.02.20:
தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனுக்கு மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்த அதிமுக அரசுக்கு தினக்காவலன் ஆசிரியர் எஸ்.முருகநாதன் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார்.

‘தினத்தந்தி’ அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இதன்பேரில் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் செலவில், சிவந்தி ஆதித்தன் முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின.

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் திறப்பு விழா இன்று (22ம் தேதி) நடந்தது. இந்த விழாவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மணிமண்டபத்தை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில், அமைச்சர்கள், அரசுத்துறை அதிகாரிகள், அதிமுகவினர், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் சிவந்தி ஆதித்தன் குடும்பத்தினர், நலம் விரும்பிகள், தினத்தந்தி, தந்தி டிவி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினக்காவலன் பாராட்டு

சிவந்தி ஆதித்தன் மணிமண்டபம் திறப்பு விழா குறித்து ‘தினக்காவலன்’ இணைய இதழ்/டிவி ஆசிரியர் கவிஞர் எஸ்.முருகநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“மரியாதைக்குரிய சிவந்தி பா.ஆதித்தன் அவர்கள், பத்திரிகை மட்டுமின்றி விளையாட்டு, கல்வி, சமூகப்பணி என்று பல துறைகளிலும் தமிழர் நலனுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர். தினத்தந்தியை அவருடைய தந்தை ஆரம்பித்த காலத்தில் அவருக்கு உறுதுணையாக, அரணாக, பாதுகாப்பு கவசமாக மட்டுமின்றி, சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும் சேவகர்களாகவும் இருந்தவர்கள் தென் மாவட்ட மக்கள். அந்த உந்துதலே தந்தியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் அஸ்திவாரம். அதில் என் குடும்பத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

பெரியவர் மறைவுக்குப்பின்னர் சிவந்தி ஆதித்தன் கொண்ட அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் தினத்தந்தியை உயர்த்தியது. சமூக அக்கறை, சேவை என்று அவர் பணிகள் தொடர்ந்தன. தமிழக பத்திரிகை உலகில் தன்னுடைய ஸ்திரத்தன்மையை நிலை நாட்டினார். அவர் சாதனை வேறு எவருக்கும் சாத்தியமானதா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு சாதித்த பிறகே மறைந்தார்.

அவர் மறைந்தாலும் அவருடைய அர்ப்பணிப்பு சேவைகளில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார், என்றும் அவர் திருநாமமும், புகழும் வாழும்.

அத்தகைய சிவந்தி ஆதித்தனாருக்கு ஆலவாய் அய்யன், சூரசம்ஹார நாயகன், தமிழின் தலைவன் என் அப்பன் முருகப்பெருமான் வீற்றிருக்கும் முக்கிய தலத்துக்கு அருகிலேயே மணிமண்டபத்தை அம்மாவின் அரசு அமைத்திருப்பது, சிவந்தி ஆதித்தன் புகழுக்கு மகுடமாக அமைந்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கும், அம்மாவின் அரசை வழி நடத்தும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் என் நன்றியையும் பாராட்டுகளையும் மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படித்தபோதுதான் தினத்தந்தி அதிபரின் தமிழுக்கான நடைமுறை அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன். அதை நான் ஆராதிக்காவிட்டாலும் அதில் இருந்து விலகி நிற்க என்னால் இயலவில்லை. எல்லாருடைய மனநிலையும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். அந்த அளவுக்கு அடித்தட்டு மக்கள் முதல் அறிவுஜீவிகள் வரை எல்லா தரப்பினரையும் தினத்தந்தியை வாசிக்க வைத்ததே பெரிய சாதனைதான். அந்தச் சாதனையை மதிப்புக்குரிய நண்பர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் தொடர்வார் என்று நம்புகிறேன். ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு நாளில், தந்தி அதிபருக்கு இதை என் கோரிக்கையாகவே வைக்கிறேன், ஆதித்தனார் புகழ் ஓங்குக!”

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் எஸ்.முருகநாதன் குறிப்பிட்டுள்ளார்.