காற்று, நீரை கெடுக்கும் 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி அபராதம்: அரசு அதிரடி

காற்று, நீரை கெடுக்கும் 29 தொழிற்சாலைகளுக்கு 6.88 கோடி அபராதம்: அரசு அதிரடி

வேலூர், 02.02.20:
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் காற்று மற்றும் நீருக்கு அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 29 தொழிற்சாலைகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மொத்தமாக 6.88 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் அமைந்திருக்கும் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் வேதிபொருட்கள் தயாரிக்கும் நிறுவனம், ரசாயன தோல் தொழிற்சாலைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் காற்று மற்றும் நீர் மாசுபடும் வகையில் செயல்பாடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, அங்கு செயல்படும் தொழிற்சாலைகளில், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீரை 29 தொழிற்சாலைகள் வெளியேற்றியதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதைத்தொடர்ந்து, காற்று மற்றும் நீருக்கு அதிக அளவில் மாசு ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்பட்டு வந்த ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் அதன் முதலீட்டு தகுதிக்கு ஏற்றவாறு அபராதம் விதித்தனர். இதன்படி மொத்தம் 6.88 கோடி ரூபாய் அபராதத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது.

இது, அந்தப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்பையும், தொழிற்சாலைகள் நடத்தும் தரப்பினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.