மணக்கோலத்திலேயே அறுவடைக்கு வந்த புது தம்பதி: மறு வீடு போகாமல் தாய் வயலுக்கு முதல் மரியாதை!

மணக்கோலத்திலேயே அறுவடைக்கு வந்த புது தம்பதி: மறு வீடு போகாமல் தாய் வயலுக்கு முதல் மரியாதை!

புதுக்கோட்டை, 31.01.20:
பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, திருமணம் முடிந்த கையோடு வயலில் இறங்கிய புதுமணத் தம்பதிகள் சம்பா நெல் அறுவடையில் ஈடுபட்டது பலரையும் யோசிக்க வைத்தது.


புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பட்டதாரியான இவருக்கும், திருச்சி திருவெறும்பூரைச் சேர்ந்த பட்டதாரி பவித்ரா என்பவருக்கும் திருமணம் நேற்று (30ம் தேதி) நடைபெற்றது.

திருமணம் முடித்த கையோடு மாலையும் கழுத்துமாக திருமண கோலத்திலேயே கீரமங்கலத்தில் உள்ள பாலமுருகனின் வயலுக்குச் சென்ற புதுமணத் தம்பதியினர், அங்கு விளைந்திருந்த பாரம்பரிய நெல்லான மாப்பிள்ளை சம்பாவை அறுவடை செய்தனர்.

இது குறித்து பாலமுருகன் சொன்னது;
பாரம்பரிய விவசாயத்தை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பது என் ஆசை. அதனால்தான், திருமணம் முடிந்த கையோடு வயலுக்கு வந்து, நானும் என் மனைவியும் கதிர் அறுத்தோம். சம்பிரதாயமாக மறுவீட்டுக்குக்கூட செல்லாமல், இந்த உலகுக்கே தாய் வீடான வயலுக்கு வந்து விட்டோம். என் மனைவிக்கு நகர வாழ்க்கைதான் தெரியும் என்றாலும், இனி விவசாயத்தை கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். நகரத்தில் நான் பிறந்து வளர்ந்தாலும், விவசாயம் செய்வதையே பெரிதும் விரும்புகிறேன். நான் செய்யும் வேலையோடு, விவசாயமும் செய்வேன். அதுதான் உலகையே காக்கும் அர்ப்பணிப்பு தொழில்.
இப்படிச் சொன்னார் புது மாப்பிள்ளை.

பாரம்பரிய விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி, புதுமணத் தம்பதியினர் மறு வீடு கூடச் செல்லாமல், மணக்கோலத்திலேயெ வயலில் இறங்கி அறுவடை செய்ததை அந்தப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடனும் வியப்புடனும் பார்த்தது மட்டுமின்றி, விவசாயம் என்ற உன்னத தொழில் பற்றி யோசிக்கவும் ஆரம்பித்து விட்டனர்.