மரணத்தை வென்ற இலங்கை தொப்புள் கொடி உறவு: தமிழர் உயிர்களில் வாழும் அதிசய ஜீவராஜ்!

மரணத்தை வென்ற இலங்கை தொப்புள் கொடி உறவு: தமிழர் உயிர்களில் வாழும் அதிசய ஜீவராஜ்!

வேலூர், 31.01.20:
தடுப்புச் சுவரில் இருந்து தவறி விழுந்ததில் மூளைச் சாவு அடைந்த இலங்கை அகதி சிறுவனின் உடலுறுப்புகள், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

வேலூா் மாவட்டம் பாலாறு அணைக்கட்டு பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்த சின்னப்பா, சிவகாந்தி தம்பதி மகன் ஜீவராஜ் (13). இவர், அந்தப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தாா். அங்குள்ள உயரமான சுவற்றில் கடந்த 28ம் தேதி ஏறியபோது, எதிர்பாராத விதமாக  தவறி கீழே விழுந்தார்.


இதில் பலத்த காயமடைந்த ஜீவராஜை, சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் ஆஸ்பத்திரியில் சோ்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஜீவராஜ் மூளைச்சாவு அடைந்ததை டாக்டர்கள் நேற்று (30ம் தேதி) உறுதி செய்தனா்.

இதையடுத்து, பெற்றோா் சம்மதத்தின்பேரில் ஜீவராஜின் இதயம், நுரையீரல், குடல், சிறுநீரகங்கள், கண்கள் உட்பட்ட உடல் உறுப்புகள் வேலூா் சிஎம்சி, குளோபல், சென்னை காவேரி, அப்பல்லோ ஆகிய ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

இதையடுத்து, ஒரு உயிரை கொடுத்து பல உயிர்களை வாழ வைத்த தியாகிகள் பட்டியலில் தனக்கும் முக்கிய இடம் பிடித்தார் ஜீவராஜ். பெயருக்கேற்ப ஜீவ ராஜ்யம் நடத்தும் தொப்புள் கொடி உறவு ஜீவராஜ், விஷயத்தை கேள்விப்பட்ட எல்லோருடைய மனதிலும் குடி கொண்டு விட்டார்.