ஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு

ஜதி சொல்லி சாதித்த நடிகர் ராகவேந்திரா மறைவு

சென்னை, 30.01.20:
பிரபல குணச்சித்திர நடிகரும், இசையமைப்பாளருமான டி.எஸ்.ராகவேந்திரா இன்று காலமானார். அவருக்கு வயது 75.

தமிழ்த்திரையுலகில் குணச்சித்திர நடிகராக முத்திரை பதித்தவர் டி.எஸ்.ராகவேந்திரா. இசையில் நாட்டம் கொண்டு, அதை கற்றுக்கொண்டபோதும், நடிகராகவே பிரபலமானார். வைதேகி காத்திருந்தாள் படத்தில், ராமேஸ்வரம் கோவில் பிரகாரத்தில் ‘அழகு மலர் ஆட’ பாடலுக்கு ஜதி சொல்லிய நிலையிலேயே உயிரை விடும் அழுத்தமான கேரக்டரில் அசத்தி பிரபலமானார்.

அடுத்தடுத்து வந்த படங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். சிந்து பைரவி படத்தில் இன்னும் அதிகமாக பேசப்பட்டார்.
அத்துடன், சில படங்களில் பின்னணி பாடகராகவும் இருந்தார். மேலும், யாகசாலை, உயிர், படிக்காத பாடம் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தார்.

கர்நாடக சங்கீதத்தில் அலாதி பிரியம் கொண்ட ராகவேந்திரா, உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சையில் இருந்த அவர் இன்று காலமானார்.
அவருடைய இறுதிச்சடங்குகள்
இன்று மதியம் சென்னை கே.கே.நகரில் நடைபெறும் என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
ராகவேந்திரா மகள் கல்பனா, பின்னணிப் பாடகியாக உள்ளார்.
ராகவேந்திரா மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.