சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயித்த பஸ் கண்டக்டர்: கலெக்டர் கனவை நிஜமாக்க காத்திருப்பு

சிவில் சர்வீஸ் தேர்வில் ஜெயித்த பஸ் கண்டக்டர்: கலெக்டர் கனவை நிஜமாக்க காத்திருப்பு

பெங்களூர், 30.01.20:
குடிமைப் பணி அதிகாரிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்ற பஸ் கண்டக்டர், மார்ச் 25ம் தேதி நடக்கும் நேர்முகத் தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மலவள்ளியைச் சேர்ந்தவர் மது (29). பள்ளிப் படிப்பை முடித்த இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக 19 வயதில் பஸ் கண்டக்டராக பணியில் சேர்ந்தார். இருந்தபோதும், ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் முயன்று, தொலைநிலைக்கல்வி மூலம் பட்டப்படிப்பு முடித்ததுடன் முதுகலை பட்டமும் பெற்றார்.

பஸ் கண்டக்டராக தினமும் 8 மணி நேரம் பணி புரிந்து விட்டு, அதன் பின்னர் வீடு திரும்பும் இவர், ஓய்வின்றி படித்து யுபிஎஸ்சி எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஐஎப்எஸ், ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி 2 நிலை தேர்வுகளிலும் வெற்றி பெற்று பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்து விட்டார். இப்போது நேர்முகத்தேர்வுக்காக தயாராகி வருகிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது:
என் குடும்பத்தில் நான் மட்டுமே கல்வி கற்றுள்ளேன். எந்த தேர்வில் தேர்ச்சி பெற்றேன் என்பதுகூட என் பெற்றோருக்கு தெரியாது. ஐஏஎஸ் அதிகாரி ஆவதற்கான நேர்முகத்தேர்வுக்கு தயாராவது குறித்து, பிஎம்டிசி எனப்படும் பெங்களூர் நகர பஸ் போக்குவரத்தின் நிர்வாக இயக்குனர் ஷிகா பயிற்சி அளிக்கிறார். இது, எனக்கு பேருதவியாக இருக்கிறது.

வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் எனக்குள் இருக்கிறது. தினமும் அதிகாலை 4 மணிக்கு எழும் நான், நடத்துனர் பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு படிக்கிறேன். வரும் மார்ச் 25ம் தேதி நடக்கும் நேர்முகத் தேர்வில், கண்டிப்பாக தேர்ச்சி பெறுவேன்.

இவ்வாறு நம்பிக்கையுடன் தெரிவித்தார்.