ஜவுளிக்கடையில் அழைத்தது அதிர்ஷ்டம்… துள்ளிக்கிக்கிட்டு வந்தது ஜல்லிக்கட்டு காளை!

ஜவுளிக்கடையில் அழைத்தது அதிர்ஷ்டம்… துள்ளிக்கிக்கிட்டு வந்தது ஜல்லிக்கட்டு காளை!

சிவகங்கை, 27.01.20:
அதிர்ஷ்ட கூப்பன் குலுக்கலில் ஜவுளிக்கடை வாடிக்கையாளருக்கு, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது.

புதிய வாடிக்கையாளர்களை கவரவும், பழைய வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் வா்த்தக நிறுவனங்கள் பல சலுகைகளை அறிவிப்பது வழக்கம். தங்கம் மற்றும் வெள்ளிக்காசு, வீட்டு உபயோக பொருட்கள், விலையில் தள்ளுபடி போன்றவைகளை பரிசாக வழங்குவது என்று வியாபார யுக்தி முன்னேறுகிறது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், சிங்கம்புணரி நகரங்களில் குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கான ஜவுளிக்கடை நடத்தி வரும் சோமசுந்தரம் என்பவர், விவசாயம், ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்றவற்றை ஊக்கப்படுத்தும் விதமாக, தன் வாடிக்கையாளருக்கு ஜல்லிக்கட்டு காளையை பரிசாக வழங்க முடிவு செய்தார்.

இதையடுத்து, ‘தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தன் கடைகளில் 2,000 ரூபாய்க்கு மேல் ஜவுளி வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்ட கூப்பன் வழங்கி, குலுக்கல் முறையில் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்படும்’ என்று அறிவிப்பு செய்திருந்தாா்.

அதன்படி, திருப்பத்தூா் மற்றும் சிங்கம்புணரியில் இயங்கி வரும் இவருடைய கடைகளின் வாடிக்கையாளா்கள் 500 பேருக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டிருந்தன. அந்த பரிசுக்கூப்பன்களின் குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில், திருப்பத்தூரைச் சோ்ந்த ராமசாமி ராஜா என்பவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதைத்தொடர்ந்து அசருக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2வது மற்றும் 3வது பரிசு பெற்றவர்களுக்கு நாட்டு காளை கன்றுகள் வழங்கப்பட்டன.

இந்த பரிசுகளை திருப்பத்தூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் சண்முகவடிவேல், திமுக நகரச் செயலா் காா்த்திகேயன், தொழிலதிபா் கான் முகமது உட்பட பலர் கலந்து கொண்டனா்.