வள்ளல் சீதக்காதி மண்ணில் இப்போதும் சாதித்தது இன்னொரு பிஞ்சு கை!

வள்ளல் சீதக்காதி மண்ணில் இப்போதும் சாதித்தது இன்னொரு பிஞ்சு கை!

ராமநாதபுரம், 26.01.20;
கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற 8ம் வகுப்பு மாணவர் ஒருவர், ஒரு டன் எடைகொண்ட காரை தன் கை விரல்களில் ஏற்றி இறக்க வைத்து துணிச்சல் சாதனை படைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. கீழக்கரை டிஎஸ்பி முருகேசன் தலைமை வகித்தார். கைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி முதல்வர் முகம்மது மீராசா முன்னிலை வகித்தார். பள்ளி முதல்வர் சாஹிரா பானு வரவேற்றார்.

இதில், கராத்தே கலையில் தேர்ச்சி பெற்ற 8ம் வகுப்பு மாணவர் முகம்மது சமர் மரைக்கா (14), தரையில் கவிழ்ந்து படுத்துக்கொள்ள, அவருடைய 2 கைகளின் விரல்கள் மீது ஒரு டன் எடை கொண்ட சொகுசு காரை ஏற்றி இறக்கினார் கராத்தே பயிற்சியாளர் கண்ணன். அந்த தாளாத அசுரச்சுமையை லாவகமாகச் சுமந்து கடத்தி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்தார் மாணவர் மரைக்கா.

இது குறித்து மாணவர் மரைக்கா கூறியதாவது: கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன், கைகளுக்கு உரமேற்றும் முறையான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்.
இதனால், ஒரு டன் எடை கொண்ட காரை கைகளில் ஏற்றி இறக்கியபோது, எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், உடல் வலிமையை விட மன வலிமைக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் இந்தச் சுமை என்னை சிறிதும் பாதிக்கவில்லை. எனக்கு பயிற்சியளித்த கராத்தே மாஸ்டர் கண்ணனுக்கும், பள்ளி நிர்வாகத்துக்கும், எனக்குள் மன உறுதியை அளித்த இறைவனுக்கும் நன்றி.
இவ்வாறு மாணவர் மரைக்கா கூறினார்.

தானம்… தைரியம்!

சாதனை படைத்த மாணவரை, சீதக்காதி அறக்கட்டளை உறுப்பினர் அஷ்ரப் அப்துர் ரகுமான் புகாரி, பொதுமேலாளர் சேக் தாவூத்கான், தாசிம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லுாரி முதல்வர் சுமையா ஆகியோர் பாராட்டினர். விஷயத்தை கேள்விப்பட்ட எல்லாரும் பாராட்டுகின்றனர்.

‘செத்தும் கொடுத்தவர் சீதக்காதி’ என்ற புகழுக்குரிய, சீதக்காதி பிறந்த மண் கீழக்கரை. ராமநாதபுரம் மன்னர் சேதுபதியின் உற்ற தோழராக விளங்கிய சீதக்காதி கைகளில் தயாள குணம், தர்ம கர்மம், அள்ளிக்கொடுக்கும் வள்ளல்த்தனம் கடைசி வரை குடி கொண்டிருந்தது. அதே சீதக்காதி மண்ணில் பிறந்த மாணவர் மரைக்கா கைகளில் இப்போது தைரியம், வீரியம், துணிச்சல் குடி கொண்டுள்ளது. சீதக்காதி மண்ணில் மீண்டும் கரம் சிறப்பு பெறுவது குறிப்பிடத்தக்கது.