தமிழர் வலையில் சிக்கியது கப்பலையே மிரட்டும் திமிங்கல சுறா!

தமிழர் வலையில் சிக்கியது கப்பலையே மிரட்டும் திமிங்கல சுறா!

புதுச்சேரி, 25.01.20:
மீனவர் வலையில் 18 அடி நீள அரியவகை திமிங்கல சுறா சிக்கியது.

புதுச்சேரி வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பரசுராமன்(38). இவர், தன்னுடைய விசைப்படகில் மீனவர்கள் 6 பேருடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
வஙகக்கடலில் பனித்திட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, வலையில் பெரிய மீன் ஒன்று சிக்கியது. இதையடுத்து வலையை இழுத்து பார்த்தபோது, அது அரிய வகையைச் சேர்ந்த ராட்சத சுறா என்பது தெரிந்தது. அந்த சுறாவை மிகவும் சிரமப்பட்டு படகில் ஏற்றிய மீனவர்கள், அதை புதுச்சேரி தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் சேர்த்தனர்.
பின்னர்,

இது குறித்து புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, வனத்துறை அதிகாரிகள் மற்றும் ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் குமார் தலைமையில் மாணவர்கள் அங்கு விரைந்து, பிடிபட்ட சுறாவை பார்வையிட்டனர்.

தொடர்ந்து அந்த சுறா ஜேசிபி இயந்திரம் உதவியுடன் துறைமுக வளாகத்தின் வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அதன் உடலை அந்தப்பகுதியில் புதைத்தனர். நீர்மூழ்கி கப்பலுக்கே சவால் விடும் திமிர்த்தனம் கொண்டது இந்த சுறா என்ற கூறப்படுகிறது.

இது குறித்து டாக்டர் குமார் சொன்ன தகவல்:
மீனவர்கள் வலையில் சிக்கியது ‘வேல் ஷார்க்’ என்று அழைக்கப்படும் திமிங்கல சுறா. இது, 18 அடி நீளமும், 3 டன்னுக்கும் அதிகமான எடையும் கொண்டது. மன்னார் வளைகுடா ஆழ் கடலில் இத்தகைய திமிங்கல சுறாக்கள் உள்ளன. நீரோட்ட மாற்றத்தால் புதுச்சேரி கடற்பகுதிக்கு வந்து மீனவர் வலையில் சிக்கியிருக்கலாம். அதன் இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வுக்கு பின்னரே தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ராட்சத திமிங்கல சுறா குறித்து தகவலறிந்த பொதுமக்கள் அதை பார்ப்பதற்கு தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் திரண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.