காக்க பாடினார் சேய்… கேட்டதும் பறந்தார் தாய்: நாட்டையே நனைத்தது பாசக்கண்ணீர்

காக்க பாடினார் சேய்… கேட்டதும் பறந்தார் தாய்: நாட்டையே நனைத்தது பாசக்கண்ணீர்

ஜகார்த்தா, 25.01.20:
தாயின் மருத்துவச் செலவுக்காக சிறுமி ஒருவர் பாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்; மகள் பாடுவதை டிவியில் பார்த்தபடியே தாய் உயிர் பிரிந்த செய்தி கேட்டு மேடையிலேயே சிறுமி கதறி அழுதது நாட்டு மக்களையே உலுக்கியது.

இந்தோனேசியாவில் ‘லிகா தங்தத்’ என்ற பாடல் போட்டி நடந்தது. இதில் வென்றவர்களுக்கு 28,000 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.26 லட்சம்) பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையந்த ஜன்னா என்ற 14 வயது சிறுமி, உயிருக்கு போராடும் தனது தாயின் மருத்துவச் செலவுக்காக அந்தப் போட்டியில் பங்கேற்றார். இதில் தாயை நினைத்து உருக்கமாகப் பாடினார்.

அரையிறுதிப் போட்டியில் பங்கேற்ற ஜன்னா, அதில் வெற்றியும் பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதியானார். இறுதிச்சுற்றுக்கு தான் தகுதியான தகவல் மேடையில் அறிவிக்கப்பட்டபோது, இந்த மகிழ்ச்சியான தகவலை தனது தாயிடம் போனில் சொல்ல ஜன்னா விரும்பினார். அப்போது, அவர் பாடலை டிவியில் பார்த்துக் கொண்டே ஜன்னா தாய் உயிர் பிரிந்த அதிச்சி தகவலை உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இதைக் கேட்ட சிறுமி ஜன்னா, மேடையிலேயே கதறி அழுதார். இதைக் கண்டு அரங்கில் இருந்த அனைவரும் குலுங்கிக் குழுங்கி அழுதனர். நேரலையாக டிவியில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் தாங்க முடியாத சோகத்தில் ஆழ்ந்தனர். இந்தச் சோகம் இன்னும் அந்த நாடு முழுவதும் காணப்படுகிறது என்பது கூடுதல் சோகம்.