“மன்னிப்பா… நானா?” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி!

“மன்னிப்பா… நானா?” பெரியாரிஸ்ட்டுக்கு ரஜினி ‘ஸ்டெடி’ பதிலடி!

சென்னை, 21.01.20:
கபட சிந்தனை எதுவுமின்றி, மனதில் பட்டதை அப்போதே சொல்லி விடும் சுபாவம் கொண்டவர் நடிகர் ரஜினிகாந்த். அதனால் அவ்வப்போது சர்ச்சையில் சிக்கவும் தவறுவதில்லை. ஆனால், தான் சொன்ன ஒரு கருத்து சர்ச்சையானால் அதை மறுபரிசீலனை செய்யவும், மாற்றிச்சொல்லவும், தேவைப்பட்டால் வருத்தம் தெரிவிக்கவும் தயங்காதவர் ரஜினி. அதே ரஜினி, இப்போது பெரியார் என்று திராவிடக் கட்சிகளால் அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி, இந்துக்களுக்கு எதிராக 1971ல் நடத்திய ஒரு போராட்டம் பற்றி தெரிவித்திருந்தார். உடனே, பெரியாரிஸ்ட் என்ற போர்வையில் சிலர் வெகுண்டெழுந்து ரஜினிக்கு எதிராக போராட்டம், வீடு முற்றுகை, போலீசில் புகார் என்று களம் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் ஒரே பரபரப்பு. ஆனால் ரஜினியிடம் அசாத்திய தெளிவு. தான் சொன்ன விஷயத்தை மீண்டும் தெளிவுபடுத்தியதுடன், இதற்காக மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நெத்தியடியாக தெரிவித்துள்ளார். அதன் விவரம்:

துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, ஈ.வெ.ராமசாமியின் இந்து விரோத போராட்டம் குறித்த சம்பவம் பற்றி கருத்து தெரிவித்தார். அந்த நாளில் நடந்த விஷயத்தை அப்படியே பதிவு செய்திருந்தார்.
மேலும், ரஜினி குறிப்பிடுகையில், ‘1971ல் சேலத்தில் இந்துக்கடவுளுக்கு எதிராக ஈ.வெ.ராமசாமி பேரணி நடத்தினார். இந்து கடவுள்களை மோசமாக அவர் விமர்சித்தது பற்றி யாருமே எழுதவில்லை. ஆனால் சோ மட்டும் தைரியமாக துக்ளக்கில் எழுதினார்’ என்று குறிப்பிட்டார்.

ஈ.வெ.ராமசாமி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு சில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. ரஜினிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரஜினிக்கு எதிராக இன்று அவர் வீடு முன் போராட்டம் நடத்தப்போவதாக ஈ.வெ ராமசாமிக்கு ஆதரவான அமைப்பைச் சேர்ந்த ஒரு சிலர் மிரட்டல் விடுத்திருந்தனர். இதனால் ரஜினிகாந்த் வீட்டில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், ரஜினிகாந்த் இன்று தன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 1971ல் திராவிடர் கழகம் நடத்திய பேரணி குறித்து பேசிய கருத்துக்கு வருத்தமோ, மன்னிப்போ கேட்க மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘1971ல் சேலத்தில் நடந்த சம்பவம் மறுக்க வேண்டிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம். ராமர், சீதை சிலைகள் உடை இல்லாமல் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டதை பலரும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இந்த விஷயத்தில் நான் இல்லாததையோ, கற்பனையாகவோ எதையும் சொல்லவில்லை. 2017ல் அவுட்லுக் பத்திரிகையில் வந்த செய்தியையும் நான் கேள்விப்பட்டதையும் நான் பேசினேன். எனக்கு தெரிந்ததை நான் சொல்கிறேன், அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் சொல்கிறார்கள். நான் சொன்ன கருத்து உண்மையானது. அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமே இல்லை’ எஎன்றார் ரஜினி.
ரஜினியின் இந்த ஆணித்தரமான முடிவு, இந்து எதிர்ப்பு சக்திகளாக செயல்படும் திராவிட முகமூடி அணிந்த மத வியாபாரிகளுக்கு பெரிதும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.