ஊருக்கு வந்த உடும்புக்கு வம்பு: காட்டில் சேர்த்து காத்தது வனத்துறை

ஊருக்கு வந்த உடும்புக்கு வம்பு: காட்டில் சேர்த்து காத்தது வனத்துறை

கோவை, 21.01.20:
கோவை அருகே சின்னத்தடாகம் பகுதியில் பிடிபட்ட 4 அடி நீளமுள்ள உடும்பு, வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகள் வனவிலங்குகளின் புகலிடமாக உள்ளன. இங்கு வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராமப் பகுதிக்குள் நுழைவது வாடிக்கையாகி விட்டது.

இந்நிலையில் சின்னத்தடாகம் பகுதியில் 4 அடி நீள உடும்பு நுழைந்தது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியான சின்னத்தடாகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகே அந்த உடும்பு சுற்றித் திரிந்தது.

இதைப்பார்த்த அந்தப்பகுதி மக்கள் விடாது விரட்டிச் சென்று உடும்பை லாவகமாக பிடித்தனர். இதையடுத்து, அந்த உடும்பை கயிற்றால் மின்கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இந்தக்காட்சிகளை அந்தப்பகுதி மக்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து பலருக்கும் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து உடும்பை பத்திரமாக மீட்டு, வனப்பகுதிக்குள் விட்டனர்.