மும்பை விநாயகர் கோவிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை!

மும்பை விநாயகர் கோவிலுக்கு 35 கிலோ தங்கம் காணிக்கை!

மும்பை, 21.01.20:
மும்பையில் பிரபலமாக விளங்கும் அருள்மிகு சித்தி விநாயகர் கோவிலுக்கு, டில்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 14 கோடி ரூபாய் மதிப்பிலான 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவில். திருப்பதிக்கு அடுத்தபடியாக பிரபலமானதாகவும், ரொக்கம், நவரத்தினம், தங்கம், வெள்ளி என அதிக காணிக்கை பெறும் கோவில்களில் ஒன்றாகவும் திகழ்கிறது.

இந்தக் கோவிலுக்கு டில்லியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 14 கோடி ரூபாய் மதிப்புள்ள 35 கிலோ தங்கத்தை காணிக்கையாக கடந்த வாரம் வழங்கியுள்ளார். இதன்மூலம், சன்னதியின் உட்புற மேல் தளப்பகுதி மற்றும் கதவுகளுக்கு தங்கக் கவசம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அதேஷ் பந்தேகர் தெரிவித்தார். ஆனால் காணிக்கை வழங்கிய பக்தர் பற்றிய விவரங்களை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘சீரமைப்பு பணிகள் காரணமாக ஜனவரி 15 முதல் 19ம் தேதி வரை கோவில் மூடப்பட்டு, தங்கக் கவசம் மற்றும் விநாயகருக்கு காவி நிறத்தில் வண்ணம் பூசப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு வரை கோவிலுக்கு ரூ.320 கோடி காணிக்கை வந்துள்ளது. அது இப்போது, ரூ.410 கோடியாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட்டு வருகின்றன. இதில் 20 ஆயிரம் பேர் இதுவரை பயனடைந்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் வரையிலான நலத்திட்ட உதவிகள் அளித்த வகையில், ரூ.38 கோடி செலவிடப்பட்டுள்ளது’ என்றார்.