மூன்றே நாளில் 30 லட்சம் விதைப்பந்து தயாரித்து உலக சாதனை முயற்சி!

மூன்றே நாளில் 30 லட்சம் விதைப்பந்து தயாரித்து உலக சாதனை முயற்சி!

ராமநாதபுரம், 21.01.20:
ராமநாதபுரத்தில், மூன்றே நாட்களில் 30 லட்சம் விதைப் பந்துகள் தயாரிக்கும் உலக சாதனை நிகழ்ச்சியை, மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்தார்.தமிழகத்தின் வறட்சியின் அடையாளம் என்று கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தை பசுமையாக மாற்றும் முயற்சியில் தனியார் அமைப்புடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, மூன்று நாட்களில் 30 லட்சம் விதைப் பந்துகளை உருவாக்கும் சாதனை நிகழ்வு, ராமநாதபுரம் நேஷனல் அகாடமி பள்ளியில் இன்று (21ம் தேதி) தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியை, ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 2, 500 பேர் கலந்துகொண்டு, விதைப் பந்துகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விதைப் பந்துகள் தயாரிக்க சீத்தாப்பழம், விளாம்பழம், கொய்யா, சரக்கொன்றை, மயில்கொன்றை மற்றும் பூவரசன் உட்பட்ட தாவரங்களின் ஒரு கோடியே 20 லட்சம் விதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியை, ‘எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்’, ‘ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’, ‘இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி’ மற்றும் ‘தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ ஆகிய அமைப்புகள் நேரில் ஆய்வு செய்து, சான்றிதழ் வழங்க உள்ளன. கலெக்டரின் இந்த முயற்சி, மாவட்ட மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.