கலக்கும் கரடி: கலக்கத்தில் வனத்துறை

கலக்கும் கரடி: கலக்கத்தில் வனத்துறை

நீலகிரி, 13.12.19:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மாயார் சாலையில் மாலை நேரங்களில் கரடிகள், யானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உலா வருகின்றன.
இப்போது, அந்தப்பகுதியில் கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. சில நேரங்களில் கரடி குட்டிகளும் காணப்படுகின்றன.

இந்த நிலையில்,
மசினகுடி மாயார் சாலையில் கரடி ஒன்று, பகல் நேரத்திலேயே வாகனங்கள் வந்தாலும் பயப்படாமல் ஒய்யாரமாக சாலையில் நடை போடுகிறது.
நீண்ட நேரம் சாலையில் விளையாடுகிறது. வாகனங்கள் அருகில் சாவகாசமாக வந்து செல்கிறது. இதனை அந்த வழியாகச் செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் இருந்தவாரே பார்த்து ரசித்துச் செல்கின்றனர். விபரீதம் அறியாமல் செயல்படும் சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கவனத்துடன் கடக்க வேண்டும் எனவும், கரடிகளை பார்த்தால் சாலையோரத்தில் நின்று புகைப்படம் எடுத்தல் மற்றும் தொல்லை தரும் செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.