செய்தி சேவைக்கு சிறப்பு வெகுமதி: விருதுகளை குவித்தது ‘வீரகேசரி’!

செய்தி சேவைக்கு சிறப்பு வெகுமதி: விருதுகளை குவித்தது ‘வீரகேசரி’!

கொழும்பு, 12.12.19:
சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழாவில், ‘வீரகேசரி’ நிறுவனத்துக்கு ஒன்பது விருதுகள் அளிக்கப்பட்டன.

இலங்கையில் செய்திகளை உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் ஊடகத்துறையினருக்கு, இலங்கை பத்திரிகை அமைப்பும், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து ஆண்டுதோறும் வழங்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்கின்றன. இலங்கை ஊடகவியலாளர்கள் பெறும் உயரிய விருதாக இது கருதப்படுகிறது.

இந்த ஆண்டு விருது வழங்கும் விழா, கல்கிஸை மவுண்ட் லெவேனியா ஓட்டலில் நடந்தது.

இதில், இந்த ஆண்டுக்கான அதி சிறந்த ஊடகவியலாளருக்கான ‘மேர்வின் டி சில்வா’ விருது, ‘வீரகேசரி’ வார இதழ் உதவி செய்தி ஆசிரியர் ஆர்.ராம்குமாருக்கு வழங்கப்பட்டது.

இது தவிர, மேலும் 8 விருதுகளை எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் சிலோன் லிமிட்டெட் நிறுவனத்தால் வெளியிடப்படும் பத்திரிகைகள் பெற்றுள்ளன.

அதன்படி, ‘வீரகேசரி’ நாளிதழின் செய்தி ஆசிரியர் ஐ.ராபர்ட் அன்டனிக்கு, சிறந்த விவரண கட்டுரைக்கான ‘உபாலி விஜேவர்த்தன விருது’ வழங்கப்பட்டது.

‘வீரகேசரி’ நாளிதழின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் எஸ்.ஜே. பிரசாத்துக்கு சிறந்த விளையாட்டுத்துறை ஊடகவியலாளருக்கான விருது வழங்கப்பட்டது.

‘வீரகேசரி’ உதவி ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரனுக்கு, சிறந்த பத்தி எழுத்தாளருக்கான ‘பி.ஏ.சிறிவர்த்தன விருது’ வழங்கப்பட்டது.

சிறந்த செய்தி இணையதளத்துக்கான விருதை, ‘மெட்ரோ நியூஸ்’ பெற்றது. டிஜிட்டல் மீடியா பொறுப்பு அதிகாரி எஸ்.ரமேஸ்குமார் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.

சிறந்த செய்தி இணையதளத்துக்கான திறமை சான்றிதழ் விருதுகளை ‘வீரகேசரி’ மற்றும் ‘விடிவெள்ளி’ பெற்றன.
‘வீரகேசரி’ இணையதளம் சார்பில், அதன் உதவி ஆசிரியர் பிரியதர்ஷன் வீரராஜனும், ‘விடிவெள்ளி’ இணையதளம் சார்பில், அதன் மூத்த உதவி ஆசிரியர் எஸ்.என்.எம்.சுஹைலும் அதற்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.

சிறந்த வடிவமைப்புக்கான திறமை சான்றிதழ் விருதை, ‘விடிவெள்ளி’ பத்திரிகை பெற்றது. அதன் பக்க வடிவமைப்பாளர் ராமகிருஷ்ணன் விமலா, அதற்கான விருதை பெற்றுக்கொண்டார்.

அத்துடன், எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடாக வரும் ‘சூரிய காந்தி’ இதழின் சிறந்த புலனாய்வு செய்தி அறிக்கைக்கான திறமை சான்றிதழ் விருதை, ஊடகவியலாளர் எம்.செல்வராஜா பெற்றுக் கொண்டார்.