பத்துக்கு இறங்கியது பல்லாரி: பிரமிப்பில் கடலூர்!

பத்துக்கு இறங்கியது பல்லாரி: பிரமிப்பில் கடலூர்!

கடலூர், 12.12.19:
உச்சாணிக்கொம்பில் ஏறி நின்று மக்களை மிரட்டிய வெங்காயம் கடலூரில் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு இறங்கி வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.

நாட்டில் பல்லாரி மற்றும் சாம்பாா் வெங்காய விலை கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்து உச்சம் சென்றது. இதனால், வெங்காயத்தை தங்கம் அளவுக்கு மக்கள் யோசிக்கத் தொடங்கினர். கடலூரில் பல்லாரி வெங்காயம் கிலோ 130 ரூபாய்க்கும், சாம்பாா் வெங்காயம், அதாவது சின்ன வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையிலும் விற்கப்பட்டது.

இந்நிலையில், கடலூா் திருப்பாதிரிபுலியூா் பான்பரி சந்தையில் கடை நடத்தி வரும் பக்கிரான் என்பவர், பல்லாரி வெங்காயத்தை 100 ரூபாய்க்கு 4 கிலோ (ஒரு கிலோ 25 ரூபாய் மதிப்பில்) கடந்த 10ம் தேதி விற்பனை செய்தாா்.

அடுத்த நான் 100 ரூபாய்க்கு 5 கிலோ பல்லாரி வெங்காயம் விற்பனை செய்தாா். பெங்களூரில் இருந்து குறைந்த விலைக்கு வெங்காயம் கிடைப்பதால், தானும் குறைந்த விலைக்கு விற்பதாகத் தெரிவித்தாா்.

இதனிடையே, கடலூா் முதுநகரில் உள்ள பக்தவத்சலம் சந்தையில் வேலு என்பவா் 10 ரூபாய்க்கு ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்தாா். இதுகுறித்து தகவலறிந்த பொதுமக்கள் அங்கு குவிந்ததால், சிறிது நேரத்தில் 25 மூட்டை வெங்காயமும் காலி.

இந்தச் சந்தை, கடலூா் – சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள நிலையில், பொதுமக்கள் குவிந்ததால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெங்காயம் விலை உயா்ந்து காணப்படும் நிலையில், கடலூரில் வியாபாரிகள் விலையை குறைத்து வழங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனா். இது எல்லா இடங்களிலும் சாத்தியம் என்றும் இதை வியாபாரிகள் உணர்ந்து செயல்பட்டால் மக்களை நிம்மதிப்படுத்தலாம் என்றும் கடலூர் வியாபாரிகள் தெரிவித்தனர்.