பயணிகள் விமானம் புது சாதனை: 19 மணி நேரம் தொடர்ந்து பறந்து அசத்தல்

பயணிகள் விமானம் புது சாதனை: 19 மணி நேரம் தொடர்ந்து பறந்து அசத்தல்

சிட்னி, 21.10.19:
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புறப்பட்டு, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, 19 மணி நேரம் தொடர்ந்து விமானம் பறந்து புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, ‘குவாண்டாஸ்’ நிறுவனம், நீண்ட தொலைவுக்கு இடை நிற்காமல் தொடர்ந்து பயணிக்கும் திறன் படைத்த விமானத்தை அறிமுகம் செய்துள்ளது. குவாண்டாஸ் நிறுவனத்தின் புதிய விமானத்தால், தொடர்ச்சியாக, வானில், 20 மணி நேரம் வரை பறக்க முடியும். அது தொடர்பாக சோதனைகள் நடத்திய அந்த நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு, இந்த விமானத்தின் முதல் சேவையை தொடங்கியது.

நியூயார்க்கில் இருந்து கடந்த 18ம் தேதி இரவு, 49 பயணிகளுடன் புறப்பட்ட, குவாண்டாசின், ‘போயிங் 787-9’ ரக விமானத்தில், எங்கும் நிற்காமல் பயணிக்க ஏதுவான வகையில், போதுமான எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது. விமானம் புறப்பட்டவுடன், பயணிகள் அனைவரும் தங்கள் கைக்கடிகாரத்தின் நேரத்தை, சிட்னி நேரத்துக்கு மாற்றி வைத்தனர். பயணிகள் மற்றும் விமானிகள் உடல்நிலை, மெலோட்டின் அளவு, மூளை அதிர்வலை ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. பெரும்பாலான பயணிகள் திரில் அனுபவ மூடில் உற்சாகமாக இருந்தனர். சில பயணிகள் மட்டும் பதைபதைப்புடன் காணப்பட்டனர். அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வர சக பயணிகள் முயன்றனர்.

இரவு நேரத்தில் விமானம் புறப்பட்டால், சிறிது நேரத்தில் பயணிகளுக்கு உணவு அளிக்கப்பட்டு, துாங்க அறிவுறுத்தப்படுவது வழக்கம். ஆனால், இந்த விமானத்தில், மதிய உணவு அளித்த பிறகு, 6 மணி நேரம் பயணிகளை விழித்திருக்கச் செய்து, அதன்பிறகே இரவு உணவு வழங்கப்படு, துாங்க அனுமதிக்கப்பட்டனர்.அதாவது, கிழக்கு ஆஸ்திரேலியாவில் இரவு வரும் வரை அனைவரையும் விழித்திருக்க வைத்து, உணவு வழங்கப்பட்டது. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் அவர்களுக்கு கார்போஹைட்ரேட் உணவுகள் வழங்கப்பட்டு, வெளிச்சமான திரை விளக்குகளைப் பார்க்காமல் துாங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

விமானத்தை இயக்குவதற்கு, வழக்கமாக இருக்கும் 2 விமானிகளுடன் கூடுதலாக 2 விமானிகள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். அதாவது, இந்த விமானத்தை 4 விமானிகள், மாறி மாறி இயக்கினர். தொடர்ந்து 19 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் விமானம் பறந்து, சிட்னியில் தரையிறங்கியது. பயனிகளும், விமானிகள் மற்றும் பணியாளர்களும் உற்சாகத்துடன் காலடி எடுத்து வைத்தனர்.

இது குறித்து குவாண்டாஸ் விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆலன் ஜோய்ஸ் கூறுகையில், ‘தொடர்ந்து 19 மணிநேரத்துக்கும் மேலாக விமானம் பறந்துள்ளது ஒரு வரலாற்று நிகழ்வு. பயணிகளையும், விமானிகளையும், எவ்வாறு மேனேஜ் செய்வது என்பதை இதில் கற்றுக்கொண்டோம்’ என்றார்.