பாம்பனில் 3 டன் கடல் அட்டை பறிமுதல்: கடத்திய 2 பேர் கைது

பாம்பனில் 3 டன் கடல் அட்டை பறிமுதல்: கடத்திய 2 பேர் கைது

ராமநாதபுரம், 14.10.19:
பாம்பனில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 டன் கடல் அட்டைகளை வனத்துறை அதிகாரிகள்
பறிமுதல் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட உள்ளதாக மண்டபம் வனத்துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது.

உடனே, மண்டபம் வன அதிகாரி வெங்கடேஷ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் சந்தேகத்து இடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு நாட்டுப்படகை சோதனையிடச் சென்றனர். இதைக்கண்டதும் படகில் இருந்த 2 பேர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றனர்.
அவர்களை வனத்துறையினர் விரட்டிப்பிடித்து படகை சோதனையிட்டபோது, அதில் 261 மூட்டைகளில் உயிருடன் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த கடல் அட்டைகள் மற்றும் நாட்டுப்படகை வனத்துறையினர் பறிமுதல் செய்து, பிடிபட்ட 2 பேரையும் மண்டபம் வனத்துறை அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் இருவரும் மண்டபம் அருகேயுள்ள வேதாளையைச் சேர்ந்த சாகுல் அமீது (31) மற்றும் கருப்பையா (45) என்பதும், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்த இருந்ததும் தெரியவந்தது.
அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 3,200 கிலோ கடல் அட்டைகள் மதிப்பு 40 லட்சம் ரூபாய் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.