மோடி, ஜின்பிங் சந்திப்பில் முன்னிலை வகித்தது முதுகுடி தமிழகம்!

மோடி, ஜின்பிங் சந்திப்பில் முன்னிலை வகித்தது முதுகுடி தமிழகம்!

மாமல்லபுரம், 11.10.19:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் சீன அதிபர், பிரதமர் மோடி சந்திப்பில் தமிழகம் முன்னிலை வகித்தது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன பிரதமர் ஜின்பிங் இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, தமிழக தலைநகர் சென்னை அருகே, வரலாற்று பெருமை வாய்ந்த பல்லவர் பூமியாம் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இந்த சந்திப்புக்காக டில்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமர் மோடிக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


பிரதமர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் திருவிடந்தை சென்று அங்கிருந்து கிளம்பி கோவளம் சென்று அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார்.
இதையடுத்து, சீன அதிபர் ஜின்பிங், தனி விமானத்தில் சென்னைக்கு மாலை 2.53 மணிக்கு வந்தார். அவரை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்தி சீன அதிபரை வரவேற்றனர். பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டது.
பின்னர், சீன அதிபர் அங்கிருந்து விசேஷ காரில் கிளம்பி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.
இந்நிலையில், கோவளத்தில் தங்கியிருந்த பிரதமர் மோடி, மாலை 4 மணிக்கு, காரில் மாமல்லபுரம் கிளம்பினார். வழியில், மாணவ, மாணவிகள் திரண்டு தேசியக்கொடியாக வடிவமைந்து வரவேற்றனர். தமிழக பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகளும் நடந்தன.
மோடி
வழக்கமாக அணியும் குர்தாவுக்கு பதிலாக தமிழகத்தின் பாரம்பரிய உடையான, வேட்டி, சட்டை மற்றும் தோளில் துண்டு அணிந்தவாறு மாமல்லபுரம் வந்தார். வேட்டியைக்கூட தமிழகத்தின் சாதாரண கிராமத்து விவசாயி பாணியில் உடுத்தியிருந்தார். மோடியை அதிகாரிகள் வரவேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு சீன அதிபர் ஜின்பிங் வந்தார். அவரை மாமல்லபுரத்தில் மோடி வரவேற்று பல்லவர் கால சிற்பங்களை காட்டி, அதன் பெருமைகளை எடுத்துக்கூறினார். அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருட்டி பாறை, பஞ்ச ரதம் பகுதிகளுக்கு மோடி அழைத்துச்சென்று அவற்றின் கலை நுணுக்கம் மற்றும் புராண கால சிறப்புகளை விளக்கினார். இதை கண்டும் கேட்டும், பெரிதும் வியந்தார் ஜின்பிங்.


பின்னர், பஞ்ச ரதம் முன்பு இரு தலைவர்களும் அமர்ந்து பேசினர். சீன அதிபருக்கு இளநீர் வழங்கி மோடி உபசரித்தார். அப்போது, நெகிழ்ந்த ஜின்பிங், ‘உங்கள் (மோடி) கனிவான உபசரிப்பும், தமிழர்களின் தாயுள்ள வரவேற்பும் என்னை நெகிழ வைத்து விட்டது’ என்றார். இதையடுத்து, ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை நடந்தது. அதில் கலாச்சாரம் முக்கிய இடம் பெற்றது.
பின்னர், இரு தலைவர்களும் அங்கிருந்து கடற்கரை கோவில் சென்றனர். கோவிலை வலம் வந்த பின்னர், அங்கு நடந்த கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியையும் மோடி தாளமிட்டு ரசித்தார் என்றால், ஜின்பிங் அந்த நிகழ்ச்சிகளில் லயித்து அமர்ந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் கலைக்குழுவினருடன் இரு தலைவர்களும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, மோடி, ஜின்பிங் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர், கோவளத்துக்கு மோடியும், சென்னைக்கு சீன அதிபரும் புறப்பட்டனர். மீண்டும் இன்று இரு தலைவர்களும் சந்திக்கின்றனர். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.