ஆட்சியை கொடுத்தால் அரசியல் திருடர்களை விரட்டுவோம்: ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார உறுதி

ஆட்சியை கொடுத்தால் அரசியல் திருடர்களை விரட்டுவோம்: ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார உறுதி

அனுராதபுரம், 10.10.19:
“ஒரு தடவை எமக்கு ஆட்சியை கொடுத்துப் பாருங்கள். இந்த நாட்டில் திருட்டுக்களை தடுத்து, கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சொத்துக்களை மீட்டு மீண்டும் மக்கள் மயமாக்குவோம்” என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக தெரிவித்தார்.

இலங்கை அனுராதபுரம் தம்புத்தேகமவில் மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக கலந்துகொண்டு பேசியதாவது:
நாட்டில் கல்வி, சுகாதாரம் என அத்தியாவசிய துறைகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
ஊழல் நிறைந்த ஆட்சியை மட்டுமே ஆட்சியாளர்கள் வழிநடத்துகின்றனர். விவசாயம் இன்று நாசமாக்கப்பட்டுள்ளது. இயற்கை உரங்கள் முழுமையாக நிறுத்தப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் நச்சு உரங்களை இறக்குமதி செய்து விவசாயத்தை நாசமாக்கியுள்ளனர். எமக்கு மரணம் என்ற போராட்டம் இருந்தது. ஆனால், அடுத்த பரம்பரை அனாவசியமாக உயிரிழக்க நாம் இடம் தரக்கூடாது. 
 
யாரையும் பழிவாங்க ஆட்சியை கேட்கவில்லை. இந்த நாட்டை மாற்ற வேண்டும் என்ற உண்மையான எண்ணத்துடன் ஆட்சியை கேட்கிறோம். அது மட்டுமல்ல, இனியும் இந்த நாட்டில் திருட்டுகள், ஊழல்கள், குற்றங்கள் இடம்பெறாத வண்ணம் மாற்றத்தை உருவாக்க வேண்டும். பிரதான கட்சிகளில் யார் ஆட்சிக்கு வந்தாலும் திருடுவதை கைவிடப்போவதில்லை. 
 
எனவே, ஒரு தடவை எமக்கு ஆட்சியை கொடுத்துப்பாருங்கள். முதலாவதாக இந்த நாட்டில் திருட்டுகளை நிறுத்துவோம்; அடுத்ததாக, இந்த நாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சொத்துக்களை மீண்டும் மக்கள் மயமாக்குவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.